வரலாறு: பேரரசர் ஹர்ஷர்.
பின்தொடர்க
நாளந்தா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்
பேரரசர் ஹர்ஷர் கிபி 606 முதல் 647 லரை
பேரரசர் ஹர்ஷர் ஒரு வீரர் மட்டுமல்ல, அவரே ஒரு அறிஞர் மற்றும் அறிஞர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அவர் மகா கவிஞரான பானபட்டரை அரசவைப் பண்டிதராக ஆக்கினார். ஹர்ஷர் தானே சமஸ்கிருத மொழியில் நல்ல அறிவு படைத்திருந்தார். அவர் 'ரத்னவள்ளி', 'பிரியதர்சிகா' மற்றும் 'நாகானந்தா' ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதினார்.
பிரபல வரலாற்றாசிரியர் ஈ.பி. ஹேவல் தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் ஆரியன் ரூல் இன் இந்தியா ஃப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி டெத் ஆஃப் அக்பர்' என்ற புத்தகத்தில், "பேரரசர் ஹர்ஷர் வாளைப் பயன்படுத்துவதில் எவ்வளவு திறமையானவராக இருந்தாரோ, அதே அளவு பேனாவைப் பயன்படுத்துவதிலும் வல்லவராக இருந்தார்," என எழுதியுள்ளார்.
ஆர்.சி. மஜும்தார் தனது 'தி கிளாசிக்கல் ஏஜ்' (The Classical Age) என்ற புத்தகத்தில், "ஹர்ஷர் ஒரு சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியை நேசிப்பவர். அவரது 'நாகானந்தா' படைப்பில், காதல், மனிதநேயம், சகோதரத்துவம், இரக்கம் மற்றும் அன்பின் செய்தியை அளித்துள்ளார், இது ஹர்ஷரை ஒரு இலக்கியவாதியாக சாகாவரம் அடையச் செய்துள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷரின் காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. ஹர்ஷர் அதன் பாதுகாவலராக இருந்தார். அதன் பராமரிப்புக்காக அவர் 100 கிராமங்களைத் தானமாக வழங்கினார். அறிஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவாளராக இருந்ததால், இலக்கியத் துறையில் ஹர்ஷர் அசோகரை விடவும் மேலானவராக இருந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.
நாளந்தா பல்கலைக்கழகம்.
பேர்ரசர் ஹர்ஷர் எந்த மதத்தைப் பின்பற்றினார் என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. பானபட்டரின் கூற்றுப்படி, ஹர்ஷரின் முன்னோர்களின் மதம் சைவ மதம் ஆகும்.
மேலும், ஹர்ஷரின் நாணயங்களில் சிவன் மற்றும் நந்தியின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அவர் சைவராக இருந்ததைக் குறிக்கிறது.
பன்ஸ்கேடா மற்றும் மதுபன் கல்வெட்டுகளில் அவரது பெயருடன் 'பரம பரமேஸ்வர்' என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அந்தக் காலத்தில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பானபட்டர் மற்றும் யுவான் சுவாங் இருவரும், தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஹர்ஷர் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவராக மாறினார் மற்றும் புத்தர் மீது மிகுந்த பக்தியுடன் இருந்தார் என்று எழுதுகின்றனர்.
ஹர்ஷரின் இரண்டு நாடகங்களான 'ரத்னவள்ளி' மற்றும் 'பிரியதர்சிகா' ஆகியவற்றில் புகழப்படும் தெய்வங்கள் அனைத்தும் வேத மதத்தைச் சேர்ந்தவை, ஆனால் ஹர்ஷரின் மூன்றாவது நாடகமான 'நாகானந்தா'-வில் அவர் புத்தரை தெய்வமாகக் கருதிப் போற்றினார்.
"பேரரசர் ஹர்ஷர் ஆரம்பத்தில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவராக இல்லை, ஆனால் பின்னர் பௌத்த மதத்தைத் தழுவிய பிறகும் அவர் மற்ற மதங்களைப் புறக்கணிக்கவில்லை. அசோகர் மற்றும் கனிஷ்கரைப் போல ஹர்ஷர் பௌத்த மதத்தைப் பரப்பவில்லை. ஆனால் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பௌத்த மதத்தைக் காத்த பெருமை ஹர்ஷரையே சேரும். அவர் கண்ணோஜின் மதச் சபை மற்றும் பிரயாகின் மகா மோக்ஷபரிஷத்தில் புத்தரை முதன்முதலில் வணங்கி, பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தினார்," என ராதா குமுத் முகர்ஜி எழுதுகிறார்
Comments
Post a Comment